ஆசிட் வீச்சுக்கு உள்ளான இளம்பெண் வினோதினி சிகிச்சை பலனின்றி காலமானார்.

Tuesday, February 12, 2013

காதலை ஏற்க மறுத்ததால் ஆசிட் வீச்சுக்கு உள்ளான இளம்பெண் வினோதினி இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஒருதலைக் காதலை நிராகரித்த வினோதினி என்ற 23 வயது இளம்பெண் மீது சுரேஷ் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி ஆசிட் வீசப்பட்ட கொடூர சம்பவம் நடந்தது. இதனால் தன்னுடைய இரண்டு கண் பார்வையையும் முற்றிலுமாக இழந்தார் வினோதினி.

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை வினோதினி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சமீபத்தில் நடந்த ஆசிட் வீச்சு சம்பவங்கள்:  டிசம்பர் 2012, 30ம் தேதி அன்று உத்தரப்பிரதேசத்தில் முஸாஃபர்நகரில் இரண்டு பெண்கள் மீது திராவகம் வீசியதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலிஸார் உடனடியாக கைது செய்தனர்.

காதலிக்க மறுத்ததால் ஆசீட் வீச்சு:
கடந்த ஜனவரி30ம் தேதியன்று, சென்னை ஆதம்பாக்கம் திருவள்ளூவர் சாலையில் உள்ள இணையதள மையம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் நடந்தது. ஆசிட் வீசிய விஜயபாஸ்கர் என்ற இளைஞரை போலிஸார் கைது செய்துள்ளனர்.