நாடார்கள் தென் இந்தியாவை ஆட்சி செய்தவர்கள்- முதல்வர் ஜெயலலிதா !

Friday, November 16, 2012

சென்னை: மத்திய பாடத் திட்டமான சிபிஎஸ்இ 9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் குறித்து அவதூறாக கூறப்பட்டுள்ள பகுதிகளை உடனே நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சி.பி.எஸ்.இ. 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமூகத்தினர் பற்றி வெளியிட்டுள்ள அவதூறான கருத்தை அகற்ற நாடார் இன மக்கள் விடுத்துள்ள கோரிக்கை பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். அந்த பாடப்புத்தகம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தின் 168-வது பக்கத்தில் 8-வது சாப்டரின் 4-வது பாராவில் இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட சாதி ஆடை மாற்றம் பற்றி எழுதப்பட்டுள்ளது. அதில் நாடார் சமூகத்தினர் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது.

இந்தக் கருத்துக்கள் உண்மைக்கு முரணானது. உண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வீக இன குடிமக்கள் நாடார்கள்தான். குமரி மாவட்டம் தமிழ் நாகரீகத்தின் தொட்டிலாகத் திகழும் மாவட்டமாகும். அந்த மாவட்ட தமிழ் நாகரீகம் பற்றி தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு வாய்ந்த இந்த மாவட்டத்தில்தான் புகழ்பெற்ற தமிழ் கவிஞர்கள் தொல்காப்பியர், அதங்கோட்டாசான் பிறந்தனர்.

மேலும் திருவிதாங்கூர் மன்னர்களின் கொடூர ஆட்சியை எதிர்த்து குமரி மாவட்டத்தில் அவதரித்த அய்யா வைகுண்டர் குரல் கொடுத்தார். பல்வேறு சமுதாய சீர்திருத்தப் பணிகளை செய்த அய்யா வைகுண்டர் மேலாடை புரட்சி எனும் தோள்சீலை புரட்சியை நிகழ்த்தி காட்டினார்.

அய்யா வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களால் மாபெரும் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டது. ஆனால் அவையெல்லாம் சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டில் நாடார் இன மக்களுக்கு பாரம்பரியம் உள்ளது. சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களின் வழித் தோன்றலாக நாடார்கள் கருதப்படுகிறார்கள். அந்த மரபு நிலமைக்காரர்களால் தொடரப்படுகிறது.

முந்தைய பாண்டிய மன்னர்களின் வாரிசுகளாக இந்த நாடார்கள் தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளனர். நாடார்களின் ஆட்சி திருச்செந்தூர் தேரி மணல் காட்டுப்பகுதியில் கோலோச்சும் வகையில் இருந்தது. அவர்களது தலைநகராக கொற்கை திகழ்ந்தது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த 2 தொல்பொருள் ஆவணங்கள் மூலம் சேர, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நாடார் இன மக்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக திகழ்ந்தது தெரியவந்துள்ளது. அரசின் வரவு- செலவை அவர்கள் கவனித்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளன.

எனவே சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பது போல நாடார் சமூகத்தினர், கீழான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் ஒரு காலத்தில் தென் இந்தியாவையே ஆட்சி செய்த அரசவம்சத்தை சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டில் நாடார் இன மக்கள் செய்துள்ள சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு சாதனைகள் போற்றத்தக்கது. கல்வி மற்றும் தொழில் துறையில் அவர்கள் பெற்றுள்ள வெற்றி, அவர்களது கடின உழைப்பையும், உறுதியையும் காட்டுகிறது.

மறைந்த தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராசர் நாடார் இனத்தை சேர்ந்தவர். அவர் தமிழ்ச் சமுதாயத்துக்கு செய்துள்ள சேவைகளும், பங்களிப்பும் ஏராளம்.

நாடார் சமூகத்தினர் பற்றி சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அவதூறான கருத்துக்களை அகற்ற வேண்டும் என்று பல்வேறு நாடார் இன அமைப்புகள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளன. அந்த பாடப்புத்தக தகவல்கள் தவறான வழிகாட்டுதல்களாக உள்ளன.

மேலும் நாடார் சமூகத்தினர் பற்றி எதிர்கால மாணவர்கள் மனதில் தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் இருக்கிறது. ஆகையால் நீங்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை தாங்கள் தொடர்பு கொண்டு, நாடார் சமூகத்தினரை அவதூறாக சித்தரித்துள்ள பாடப்பகுதியை உடனே நீக்க அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


      
                                                                                                                                        courtsy- one india