பெண்கள் மீதான ஆசீட் வீச்சு சம்பவங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஷ்மி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி லோதா இவ்வாறு தெரிவித்தார்.
பெண்கள் மீது ஆசீட் வீசி தாக்குதல் நடக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்
நிலையில், மத்திய மாநில அரசுகள் இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது கடும் அதிருப்தி அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.திராவகத்தை (ஆசிட்) யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை இருப்பதால், பெண்கள் ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு ஆளாகி வருவதாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், திராவகம் விற்பனையை ஒன்று தடை செய்ய வேண்டும் இல்லை அதனை முறைப்படுத்த வேண்டும். அவ்வாறு முறைப்படுத்தினால் திராவகம் பொதுமக்கள் கைகளில் கிடைக்க வாய்ப்பில்லை என நீதிபதி தெரிவித்தார். இவ்விகாரத்தில் விரைவில், தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் 8 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் 6 வாரங்களுக்குள் மத்திய அரசு -மாநில தலைமைச் செயலர்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதில் ஆசிட் வீச்சு சம்பவத்தை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 வாரங்களில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.மேலும் ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுடைய மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும் அவர்களுக்கான நிவாரணத் தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வர்மா கமிட்டி அறிக்கையிலும் எதிர்ப்பு: திராவகம் வீச்சு குற்றத்தை, மற்ற குற்றங்களை விட வித்தியாசமான குற்றம் (Distinct Crime) என்பதை வலியுறுத்தும் சட்ட திருத்தம் இந்திய தண்டனை சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.தவிர சமீபத்தில் வெளியான நீதிபதி வர்மா கமிட்டி அறிக்கையில் : திராவகம் வீசுவது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் மோசமான குற்றம் என்றும் அதனை தடுக்க மத்திய அரசு கடுமையான சட்டங்களை நிறைவேற்ற பரிந்துரை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த ஆசிட் வீச்சு சம்பவங்கள்: பாலியல் வன்கொடுமைக்கு டெல்லி மாணவி பலியான பிறகும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கின்றன.டிசம்பர் 2012, 30ம் தேதி அன்று உத்தரப்பிரதேசத்தில் முஸாஃபர்நகரில் இரண்டு பெண்கள் மீது திராவகம் வீசியதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.சம்பவம் நடந்த நாளன்று இரவு 2 பெண்கள் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிக்ஷா அருகே வந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த திராவகத்தை அவர்கள் மீது வீசினார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள், பெண்கள் மீதான வன்முறை சம்பவம் அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டினர்.
காதலிக்க மறுத்ததால் ஆசீட் வீச்சு: கடந்த ஜனவரி30ம் தேதியன்று, சென்னை ஆதம்பாக்கம் திருவள்ளூவர் சாலையில் உள்ள இணையதள மையம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் நடந்தது. ஆசிட் வீசிய விஜயபாஸ்கர் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்னும் நபர் அங்குள்ள ஸ்ரீ இணையதள மையத்தில் பணியாற்றி வந்த பெண்ணை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார்ஆனால், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால் அந்த இணையதள மையத்திற்கு வந்த விஜயபாஸ்கர் திடீரென அந்த பெண் மீது ஆசிட்டை வீசியுள்ளார். இதில், அவரது முகம், முதுகு மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தன.
ஆசிட் வீச்சில் பார்வை போன பரிதாபம்: புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஒருதலைக் காதலை நிராகரித்த வினோதினி என்ற 23 வயது இளம்பெண் மீது சுரேஷ் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி ஆசிட் வீசப்பட்ட கொடூர சம்பவம் நடந்தது. இதனால் தன்னுடைய இரண்டு கண் பார்வையை முற்றிலுமாக இழந்த வினோதினி, இப்போது தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராகவும், மருத்துவ செலவுகளுக்காகவும் போராடி வருகிறார்.ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்யும் வினோதினியின் தந்தை மருத்துவச்செலவுகளுக்கு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.இதுபோன்ற ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பெண்களின் மறுவாழ்வுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆசிட் வீச்சில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டத்தில் தனிப்பிரிவுகள் இல்லை என்பதும் இவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
courtsy-PT