விசாரணைக்கு அழைத்து சென்ற சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து கற்பழித்த போலீஸ்.

Wednesday, February 6, 2013

சித்தூர்: ஆந்திராவில் விசாரணைக்கு அழைத்துச் சென்று சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குன்னூர்குட்டாவைச் சேர்ந்தவர் ரவி. அவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் ரவி தங்கள் மகளை கடத்திவிட்டதாக ஸ்ரீரங்கராஜபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் ரவியின் பெற்றோர், உறவுக்கார சிறுமி பாவனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் உறவினர்கள் சிலரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இரவு முழுவதும் அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். ரவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 5 பேரை ஒரு அறையில் அடைத்துவிட்டு பாவனாவை தனியாக விசாரிக்க வேண்டும் என்று குடிபோதையில் இருந்த போலீஸ்காரர் கோபி தெரிவித்துள்ளார். பாவனாவை மட்டும் வேறு அறைக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். சிறுமி அலறியும் அப்போது பணியில் இருந்த 2 போலீசார் கண்டுகொள்ளாமல் காவல் நிலையத்தை விட்டு வெளியேறினர். மறுநாள் காலை பணிக்கு வந்த சப் இன்ஸ்பெக்டரிடம் பாவனா தனக்கு நடந்த கொடுமை குறித்து புகார் கொடுத்தார். ஆனால் அவரும் அதை கண்டு கொள்ளாததால் எஸ்.பி. காந்திராஜாவிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரை ஏற்றுக் கொண்ட எஸ்.பி. கோபி மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூடுதல் எஸ்.பி. அன்னபூர்ணா ரெட்டிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கோபி கைது செய்யப்பட்டார். சம்பவம் நடந்தபோது அதை கண்டுகொள்ளாமல் இருந்த 2 போலீசார் மற்றும் புகாரை அலட்சியம் செய்த சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.