இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதிக்கு நுழைவு விசா தர இலங்கை அரசு மறுப்பு.

Saturday, February 2, 2013

கொழும்பு: இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவுக்கு இலங்கை அரசாங்கம் நுழைவு விசா வழங்க மறுத்திருக்கிறது.

இலங்கையில் தலைமை நீதிபதியாக இருந்த ஷிராணி பண்டாரநாயக்க அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபை முதல் அனைத்து உலக நாடுகளும் ஷிராணியின் பதவி நீக்கத்துக்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் ஷிராணி விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் சர்வதேச உண்மை கண்டறியும் குழு ஒன்றும் சர்வதேச பார் கவுன்சிலால் அமைக்கப்பட்டது.

இக்குழுவில் வெளிநாட்டு நீதிபதிகளும் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவினர் இலங்கைக்கு சென்று ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் தொடர்பாக விசாரணைகளை நடத்த இருந்தது. ஆனால் ஜே.எஸ். வர்மாவுக்கு இலங்கையில் நுழைவதற்கான விசாவை அந்நாடு வழங்க மறுத்துவிட்டது. இதனால் ஜே.எஸ். வர்மா தலைமையிலான பன்னாட்டுக் குழுவின் இலங்கை பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.