அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் போலவே தோன்றுகிறது ஆளுனர் உரை- டாக்டர் ராமதாஸ்.

Friday, February 1, 2013

சென்னை: முழுக்க முழுக்க தமிழக முதல்வரின் புகழ்பாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுனர் உரை அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் போலவே தோன்றுகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

தமிழ்நாட்டில் விவசாயிகள் முதல் பொதுமக்கள் வரை அனைத்து தரப்பினரும் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டுவரும் நிலையில்,
அவற்றைத் தீர்த்து ஆறுதல் அளிக்கும் வகையில் ஆளுனர் உரையில் அறிவிப்புகள் இடம்பெறும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஆளுனர் உரையில், எந்த அறிவிப்புமே இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததாலும், பருவமழை பொய்த்ததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றனர். கடன் வாங்கி சாகுபடி செய்த உழவர்கள், அதற்கான வட்டியை கட்டுவதற்கு கூட விளைச்சல் இல்லாததால் கடன் வலையில் சிக்கி, கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். வறட்சியால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்த பிறகும், விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. மாறாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் முந்தைய அறிவிப்பையே ஆளுனர் உரையில் மீண்டும் வெளியிட்டிருப்பதால் எந்த பயனும் ஏற்படாது.

இதை உணர்ந்து கருகிய சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்குவது குறித்த அறிவிப்பை ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது முதலமைச்சர் வெளியிட வேண்டும். அதேபோல், பயிர் சேதத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் சாவை கொச்சைப்படுத்தாமல், அவர்களின் குடும்பங்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆளுனர் உரைக்கு முதல் நாளன்று கூட மதுரை மற்றும் சென்னையில் கொடூரமான முறையில் இரண்டு படுகொலைகள் நடந்துள்ள நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என ஆளுனர் உரையில் குறிப்பிடப்பட்டிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்- 2023 வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதன் இலக்குகளை நோக்கிய பயணத்தில் இதுவரை எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் தொலைநோக்குத் திட்டத்தின் இரண்டாம் பகுதி வெளியிடப்படவிருப்பதாக ஆளுனர் உரையில் கூறப்பட்டிருப்பது போகாத ஊருக்கு வழி காட்டுவதாகும். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் 12 முறை கடிதம் எழுதியும் எந்த பயனும் இல்லை என்று கூறியுள்ள தமிழக அரசு, இனியும் மீனவர்கள் தாக்கப்படாமல் தடுக்க என்ன செய்யப்போகிறது என்பது குறித்து எதையும் அறிவிக்கவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், அரசு வேலைவாய்ப்பை பெருக்குதல் போன்றவற்றுக்கான எந்த திட்டமும் ஆளுனர் உரையில் இடம்பெறவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. நேரடி பண மாற்றத் திட்டம், சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு, தேசிய நீர்க் கொள்கை ஆகியற்றில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.

மொத்தத்தில் முழுக்க முழுக்க தமிழக முதலமைச்சரின் புகழ்பாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுனர் உரை அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் போலவே தோன்றுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.