மதுவிற்காக 70 வயது மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவர்.

Friday, February 8, 2013

தூத்துக்குடி அருகே மதுபானம் குடிப்பதற்காக தங்க தாலிச்செயினை அடகு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த 70 வயது மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த 75 வயது கணவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், மேலஆழ்வார் தோப்பைச் சேர்ந்த அர்ச்சுனனின்(வயது 75) மனைவி பெரியபிராட்டி(வயது 70). இளமை முதலே எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிய அர்ச்சுனன், மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். திருமணத்தின்போது மனைவி பெரியபிராட்டி சீதனமாக தந்த 70 பவுன் தங்க நகை, தன் குடும்பத்திற்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தையும் அடகுவைத்து விற்று, அதில் கிடைத்த பணத்தில் அர்ச்சுனன் குடி வாழ்க்கை நடத்தி வந்தார்.

வீட்டிலிருந்த பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களையும் குடும்ப சொத்துக்களையும் மதுகுடித்தே அவர் அழித்துவிட்டதால் அவரிடம் பெரியபிராட்டி சமீபகாலமாக பேசாமலிருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை குடிப்பதற்கு மனைவியின் தங்க தாலி செயினைக் கேட்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி பெரிய பிராட்டியை அரிவாளால் வெட்டி சாய்க்க, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடு என்பது இதுபோன்ற சம்பங்களால் உண்மையாகிறது.