பகத் சிங்கால் பாகிஸ்தானில் சர்ச்சை.

Thursday, January 3, 2013

பாகிஸ்தான் லாகூரில் தெருவொன்று சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயரை சூட்டுவதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

1947க்கு முன்னர் இந்தியா- பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ்தான் செயற்பட்டன. இந்திய தேசியவாதியான பகத் சிங், இந்திய சுதந்திரபோராட்ட இயக்கத்தின் மிகவும் முக்கிய புள்ளி. சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த பகத் சிங் தனது இளம் வயதிலேயே புரட்சிகர நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.


லாலா லஜ்பதிராய் என்னும் அரசியல்வாதியின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் பிரிட்டிஷ் பொலிஸ்காரர் ஒருவரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், தனது 23 வது வயதில் பகத் சிங் தற்போதைய லாகூரில் உள்ள சாட்மன் சதுக்கத்தில் தூக்கில் இடப்பட்டார்.

கடந்த செப்டம்பரில் லாகூரின் மாவட்ட அரசாங்கம், சாட்மன் நகரில் உள்ள ஃபாவாரா சவுக் என்னும் சதுகத்துக்கு இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான பகத் சிங்கின் பெயரை இடுவது என்று பிரகடனம் செய்தது.

சுதந்திரப் போராட்டத்துக்கான அவரது அர்ப்பணிப்புகளை கௌரவிப்பதற்காகவே இந்த பிரகடனம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு முன்னர் பகத் சிங் சாட்மன் சதுக்கத்தில் தூக்கிலிடப்பட்டார்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகளின் இருபக்கத்திலும் உள்ள அவரது ஆதரவாளர்கள் இதற்கான கோரிக்கையை விடுத்திருந்தனர். ஆனால், பல முஸ்லிம் மதக்குழுக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன குரல்களை எழுப்பி வருகின்றமையால் சர்ச்சை நிலவி வருகிறது.