புதுவையில் பள்ளி மாணவி கற்பழிப்பு-தொடரும் அவலங்கள்.

Thursday, January 3, 2013

புதுவையில் டியூசன் சென்ற பள்ளி மாணவியை பேருந்தில் கடத்திச் சென்று 3 பேர் மாறி மாறி கற்பழித்துள்ள சம்பவம் செய்வதறியாத அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதுவை திருபுவனை பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகள் பனிரெண்டாம் வகுப்புப் படித்து வந்தார். புதுவையில் டியூசன் செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் திருபுவணை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

காவல்துறையினர் பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மாணவி தனது பெற்றோருக்கு போன் செய்து தான் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் இருக்கிறேன் என்னை அழைத்து செல்லுங்கள் என்று கூறி விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்.

உடனே பெற்றோர் மற்றும் உறவினர்கள் காரில் விழுப்புரம் சென்று அங்கு மயங்கி கிடந்த சுந்தரியை காரில் ஏற்றிக்கொண்டு புதுவை வந்தனர். அப்போது அந்த மாணவி தன்னை 3 பேர் பேருந்தில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதன்பின்னர் காவல்துறையில் மாணவியின் தந்தை அளிக்கப்பட்ட புகாரில், "என் மகள் வில்லியனூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது வந்த பேருந்தில் அவருக்குத் தெரிந்த நடத்துனர் இருந்துள்ளார். அவர், என் மகளிடம் உனது தாய் பேருந்தில் இருக்கிறார் என்று கூறி அழைத்துள்ளார். இதனை நம்பி பேருந்தில் ஏறிய என் மகளை கடத்திச் சென்று, 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். என் மகள் கண்விழித்து பார்த்தபோது விழுப்புரத்தில் மயக்க நிலையில் கிடந்திருக்கிறாள்" என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் வாலிபர் மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.