வைகோவிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு .

Tuesday, December 18, 2012

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடைபெறும் நடைப்பயணத்துக்கு கோவில்பட்டியையடுத்த துறையூரில் திங்கள்கிழமை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பூரண மதுவிலக்கு கோரி மதிமுக பொதுச்செயலர் வைகோ மதிமுக இளைஞரணி, தொண்டரணி, மாணவரணியினருடன் உவரியிலிருந்து புதன்கிழமை (டிச.12) தனது நடைப்பயணத்தை தொடங்கினார்.

கோவில்பட்டியையடுத்த துறையூருக்கு திங்கள்கிழமை மாலை சுமார் 5.30 மணிக்கு வந்தார். அவருக்கு கோவில்பட்டி நகர, ஒன்றிய மதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பின்னர் துறையூரில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, தனது பயணத்தை தொடங்கினார். வரும் வழியில் சிவந்திப்பட்டி, கரிசல்குளம், துரைச்சாமிபுரம், பாண்டவர்மங்கலம் ஆகிய பகுதிகளில் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாண்டவர்மங்கலம் விலக்கிலும் வைகோ கட்சிக் கொடியை ஏற்றினார். வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக ஒன்றியச் செயலர்கள் சிவக்குமார், பவுன்மாரியப்பன், கோவில்பட்டி நகரச் செயலர் ஆர்.எஸ்.ரமேஷ், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் எல்.எஸ்.கணேசன், ஒன்றிய இளைஞரணிச் செயலர் கார்த்திகேயன் உள்பட மதிமுக தொண்டர்கள், கிராம பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.