மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் அமளி-அவை ஒத்திவைப்பு.

Tuesday, December 11, 2012

அரசுப் பணியில் எஸ்.டி.,- எஸ்.சி., பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்குவதில் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் மாறி மாறி கூச்சலிட்டனர். இதனையடுத்து அவை பிற்பகல் 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மக்களவையில், வால்மார்ட் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு தயாராகும் மத்திய அரசு : வால்மார்ட் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதன் காரணமாக இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த தயார் என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், என்ன மாதிரியான விசாரணை என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், அதிமுக, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பியுள்ளன.

பிரதமர் தலைமையில் ஆலோசனை : இதற்கிடையே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது, அமைச்சர்கள் ப.சிதம்பரம், கமல்நாத் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது, இந்தியாவில் கால் ஊன்ற வால்மார்ட் நிறுவனம் பணம் செலவழித்தது தொடர்பாக விசாரணை நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.