வதந்திகளை நம்ப வேண்டாம் - கருணாநிதி.

Wednesday, December 5, 2012

விஷமிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு என்னை பற்றி இந்த வதந்திகளை உருவாக்கி இருக்கிறார்கள், அதை யாரும் நம்பி ஏமாற வேண்டாமென்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி கேட்டுக்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி இற‌ந்து‌வி‌ட்டதாக த‌மிழக‌‌ம் முழுவது‌‌ம் இ‌ன்று காலை வத‌‌ந்‌தி பர‌வியதா‌ல் அனை‌த்து ப‌த்‌தி‌ரி‌க்கை, தொலை‌க்கா‌ட்‌சி அலுவலக‌ங்களு‌க்கு தொலைபே‌சி‌ மூல‌ம் ஏராளமானோ‌ர் ‌விசா‌ரி‌த்தன‌ர். குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்த வதந்தி அதிக அளவில் பரவியு‌ள்ளது.

வதந்தி பற்றி பரபரப்பு நீடித்ததா‌ல் சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டதாகவு‌ம் வதந்தியை அதிகரித்தனர். இது தி.மு.க. தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த நிலையில் தனது உடல்நலம் பற்றி வதந்தி பரப்பப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று மதியம் 12 மணியளவில் அறிவாலயம் வந்த அவர் இது தொடர்பாக செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பேட்டி அளித்தார்.

இன்று காலையிலிருந்து தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தொலைபேசி மூலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்களே?

இன்று காலையிலிருந்து சில விஷமிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு என்னை பற்றி இந்த வதந்திகளை உருவாக்கி இருக்கிறார்கள். அதை யாரும் நம்பி ஏமாற வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து அடம் பிடித்து வருகிறதே?

ஒரு மாநில அரசைப் பற்றி அவசரப்பட்டு நான் குற்ற‌ம்சா‌ற்ற விரும்பவில்லை. நீண்ட நாட்களாக நான், தமிழகமும், கர்நாடகமும் அண்டை மாநிலங்கள் இந்த இரண்டு மாநிலங்களும் நட்புணர்வோடு இருக்க வேண்டுமே அல்லாமல், தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருப்பவன்.

எனவே உங்கள் கேள்வியின் மூலமாக தமிழக அரசையோ, கர்நாடக அரசையோ நான் இந்தப் பிரச்சனையில் குற்ற‌ம்சா‌ற்ற விரும்பவில்லை. ஏற்கனவே காவிரி நதி பாய்கின்ற பகுதிகளில் உள்ள மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசின் உதவியோடு உருவாக்கியது காவிரி நதி நீர் ஆணையம். அந்த ஆணைத்திற்கு கட்டுப்பட்டுத் தான் காவிரி பாய்கின்ற பகுதிகளிலே உள்ள மாநிலங்கள் எல்லாம் நடக்க வேண்டும். இது அப்போதே எடுத்த முடிவு. அந்த முடிவினை தக்கக் காரணங்கள் இல்லாமல் யாரும் மீறக் கூடாது என்பது என்னுடைய கண்டிப்பான கருத்து எ‌ன்றா‌ர் கருணா‌நி‌தி.