டெல்லியில் மூன்றரை வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.

Saturday, December 22, 2012

டெல்லி: டெல்லியில் மூன்றரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பள்ளி உரிமையாளரின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம், தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி கொலை மற்றும் மேற்கு வங்கத்தில் இளம் பெண் பலாத்காரம்
என நெஞ்சை உலுக்கும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் டெல்லியில் ப்ளே ஸ்கூல் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு டெல்லியில் சாகர்பூர் பாடசாலா என்ற மழலையர் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் படிக்கும் 3 1/2 வயது பெண் குழந்தை, கடந்த திங்கட்கிழமை அன்று சோர்வாகவும், சோகமாகவும் வீடு திரும்பியது. வீட்டில் இருந்த யாரிடமும் எதுவும் பேசாமல், அந்த குழந்தை அசதியில் தூங்கிவிட்டது. அன்றிரவு, குழந்தை திடீரென்று வாந்தி எடுத்ததால், குழந்தையின் தாயும், பாட்டியும் அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர், ‘நீங்கள் உடனே போலீஸ் நிலையத்திற்கு போய் புகார் கொடுங்கள்' என்று அனுப்பிவிட்டார்.

 பள்ளியில் நடந்தது பற்றி சிறுமியிடம் அவளது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது அந்த குழந்தை தனது பள்ளி உரிமையாளரின் கணவர், தனக்கும் தன்னுடன் படிக்கும் தோழிகளுக்கும் மாத்திரை தந்து, பள்ளி பாத்ரூமிற்கு அழைத்துச்சென்று தகாத முறையில் நடந்துக்கொண்டதாக அழுதுக்கொண்டே கூறியது.

இதனையடுத்து, தனியார் ஆராய்ச்சி நிலையத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றும் பள்ளி உரிமையாளரின் கணவர் பிரமோத் மாலிக் என்பவனை கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி போலீசார் கைது செய்தனர். நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடமும், மாஜிஸ்திரேட்டிடமும் வாக்குமூலம் அளித்துள்ள அந்த குழந்தை, பிரமோத் மாலிக்கை அடையாளம் காட்டுவதற்காக அழைத்து வந்தபோது, பயத்தில் அலறியது. இந்நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பில் அஜாக்கிரத்தையாக இருந்ததாக பள்ளி உரிமையாளரான பூனம் என்ற பெண்ணை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.