இந்திய சிறைகளிலும் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்மம்.

Friday, December 28, 2012

இந்திய சிறைகளில் கடந்த 9 ஆண்டுகளில் கற்பழிக்கப்பட்டிருப்பவர்களின் பெண்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.

மருத்துவ மாணவியின் கற்பழிப்பு வழக்கை விசாரிக்க நீதிபதி வர்மாவின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவிற்கு ஆசிய மனித உரிமைகள் மையம் அளித்துள்ள அறிக்கையில், 2002ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை இந்திய சிறைகளில் தண்டனை அனுபவிக்கும் பெண்கள் கற்பழிக்க‌ப்பட்டிருப்பதாகவு‌ம், இது தொட‌ர்பாக 45 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யபட்டிருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக தரப்பட்டுள்ளது.

2002 - 2003 - 2 வழக்குகள், 2003 - 2004 - வழக்குகள் இல்லை, 2004 -2005 - 4 வழக்குகள், 2005 - 2006 - 5 வழக்குகள், 2006 -2007 - 10 வழக்குகள், 2007 - 2008 - 18 வழக்குகள், 2008 -2009 - 4 வழக்குகள். 2009 - 2010 - 2 வழக்குகள்.

தேசிய மனித உரிமை ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளின் எண்ணிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கை தொடர்ந்து பல மனித உரிமை வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்தவ‌ண்ண‌ம் உள்ளன. சிறைகளில் கூட பெண்களுக்கு பாதுகா‌ப்பற்ற நிலையை உணர்த்தும் இவ்வறிக்கை பல புதிய நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என தெரிகிறது.