துணிச்சலுடன் வாக்குமூலம் அளித்த டெல்லி மாணவி.

Thursday, December 27, 2012

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி, வாக்குமூலம் அளித்த போது மிகவும் துணிச்சலுடன் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி, சப்தர்ஜங் மருத்துவமனையில் கடந்த வெள்ளியன்று, உதவி கோட்ட மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தார்.

அதன் விவரங்கள் வெளியாகி உள்ளன. தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி, மாணவி விவரித்த போது கூறிய தகவல்களும், சம்பவத்தின் போது அவருடன் இருந்த நண்பர் அளித்த தகவல்களும் ஒத்துப் போவதாக டெல்லி காவல்துறை துணை ஆணையர் சர்மா தெரிவித்துள்ளார்.

தனது நண்பரான 28 வயது மென்பொருள் பொறியாளருடன், 16ம் தேதி இரவு 9.30 மணியளவில், முனிர்கா பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்ததாகவும், அங்கு வந்த பேருந்தில் இருந்த இளைஞர், பாலம் பகுதிக்கு பேருந்து செல்வதாக கூறி அழைத்ததாகவும், மாணவி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பேருந்தில் இருவரும் ஏறிய போது, அதில் ஆறு பேர் இருந்ததாகவும்,சில நிமிடங்கள் சென்றதும், பேருந்து வேறு வழியில் செல்வதை அறிந்து, தனது நண்பர் சந்தேகப்பட்டு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது ராம்சிங் என்பவர், தனது நண்பரை தலையில் தாக்கியதாகவும்,பேருந்தின் பின்பக்கத்துக்கு தன்னை ராகுல், அக்ஷய் சிங் ஆகியோர் இழுத்துச் சென்றதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

தனது நண்பர் மயக்கமடைந்ததும், ராம்சிங் என்பவர் தான் தன்னை முதலில் இழுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்த மாணவி, அந்த கும்பலில் இருந்தவர்கள் பேசிக் கொண்டதை வைத்து, சிலரது பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

வன்கொடுமையில் ஈடுபட்ட பின், அவர்கள் முதலில் தனது நண்பரை மட்டும் பேருந்தில் இருந்து தள்ளிவிட திட்டமிட்டதாகவும், கடைசி நேரத்தில் இருவரையும் தள்ளிவிட்டதாகவும், அதனால் இருவரும் மயக்கமடைந்துவிட்டதாகவும் அந்த மாணவி விவரித்துள்ளார்.

மேலும்,அந்த கும்பல் தங்களது துணிகள் மற்றும் உடமைகளையும் பறித்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.