இந்திய சந்தைக்குள் நுழைய வால்மார்ட் ரூ.125 கோடி செலவு.

Monday, December 10, 2012

சில்லறை வணிகத்தில் உலகின் முன்னணி நிறுவனமான வால்மார்ட், இந்திய சந்தைக்குள் நுழைய கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்காவில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்க புள்ளிகளுக்கு இன்று வரை ரூ.125 கோடி செலவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த அரசியல் செல்வாக்குமிக்க புள்ளிகளை வைத்து அமெரிக்க அரசின் மூலம் இந்திய அரசை நெருக்கி சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் மட்டும் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு குறித்த விவாதம் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 கோடி செலவிட்டுள்ளது வால்மார்ட்.

அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த அங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் உதவியை நாடலாம். மேலும் இது தொடர்பாக அவர்களுக்கு செலவும் செய்யலாம். ஆனால் அந்த செலவுக் கணக்கை ஒவ்வொரு காலாண்டிலும் அரசிடம் சமர்பிக்க வேண்டும். அதன்படி வால்மார்ட் சமர்பித்த காலாண்டு கணக்கில் தான் இந்த தகவல்கள் உள்ளன.

வால்மார்ட் செலவு செய்த ரூ.125 கோடி பணத்தை லஞ்சமாகப் பெற்றது யார் என்று பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் இன்று மாநிலங்களவையில் கேள்வியெழுப்பிய போது அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக அவை ‌த‌ள்‌ளிவைக்கப்பட்டது.