பால் தாக்கரே மாரடைப்பால் காலமானார்.

Saturday, November 17, 2012

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே (86) இன்று மாரடைப்பால் காலமானார்.

சுவாச கோளாறு காரணமாக அவதியுற்று வந்த அவருக்கு மும்பையில் உள்ள அவரது இல்லமான மட்டோஸ்ரீயில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று பிற்பகல் 3.33 மணி அளவில் பால் தாக்கரேவின் உயிர் பிரிந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஜலீல் பார்க்கர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான சிவசேனா தொண்டர்கள் குவிந்துள்ளனர். மும்பை நகரம் முழுவதும் 20,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பால் தாக்கரேவின் மரணத்தை அடுத்து மும்பையின் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

நாடு முழுவதும் உள்ள சிவசேனா கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க பால்தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் உடல் நாளை பிற்பகல் 3 மணிக்கு தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலிக்கு ஏற்பாடு

மும்பையில் நாளை காலை 7 மணி முதல் சிவாஜி பார்க்கில் மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.