குடிநீரில் கழிவு நீர் கலப்பு- நகராட்சியின் மெத்தனம் மக்கள் அவதி.

Saturday, November 17, 2012

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் திறந்துவிடப்பட்ட குடிநீரில் கழிவு நீர் கடந்த திங்கள்கிழமை கலந்து வந்தது. இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் மீண்டும் சனிக்கிழமை அதே கழிவுநீரை திறந்துவிட்டதால் பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், இடையபொட்டல் தெரு மற்றும் ஆத்துக்கடை தெரு பகுதிக்கு கடந்த திங்கள்கிழமை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் முற்றிலும் கழிவு நீராக, துர்நாற்றத்துடன் வந்துள்ளது. இதனால் குழாயை திறந்து விட்ட வீடுகளில் துர்நாற்றம் வீசி பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுப்புலட்சுமியிடம் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நகராட்சியின் குடிநீர் விநியோகப் பிரிவு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மீண்டும் சனிக்கிழமை இதே போன்று கழிவுநீர் குழாய்களில் வந்துள்ளது. இதனையடுத்து பொது மக்கள் மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்புலட்சுமியிடம் கூறினர். குடிநீர் பிரிவில் உள்ள ஒப்பந்த தொழிலாளிகளை போய் தோண்டி பார்க்கக் கூறியுள்ளார்கள். அவர்கள் சில பிரதான குழாய்களை தோண்டி பார்த்துவிட்டு உடைப்பு கண்டுபிடிக்க இயலவில்லை என்று கூறிவிட்டார்கள்.

சனிக்கிழமை இரவு இது குறித்து நாம், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுப்புலட்சுமியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டோம்.

அவர் கூறியதாவது: தற்போது உடைப்பு திருவண்ணாமலை சாலையில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். அந்த இடத்தை அடைத்துவைத்துவிட்டு தண்ணீரை திறந்துவிட்டு சோதனை செய்ய கூறியுள்ளோம் என்றார்.

இது குறித்து அப் பகுதி பொது மக்கள் கூறுகையில்: நகராட்சியில் திங்கள்கிழமையே புகார் கூறியும், எல்லா இடத்திலும் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவிவரும் சூழ்நிலையில், நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கைக் கடைபிடித்து சாக்கடை தண்ணீரை பொது மக்களுக்கு மீண்டும் சனிக்கிழமை திறந்துவிட்டுள்ளது. இதனால் இப் பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஆணையாளர் இல்லாத நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. நகராட்சியில் எந்தவித பணிகளும் செவ்வனே நடைபெறவில்லை. எல்லா வேலைகளும் ஒப்பந்த பணியாளர்களை வைத்து நடைபெறுவதால், யாரையும் எதுவும் கேட்ட இயலாத நிலை. பணிகளை நகராட்சி ஊழியர்கள் மேற்பார்வை செய்வது கூடகிடையாது என சரமாரி புகார் தெரிவித்தனர்.

நகராட்சியின் பொது சுகாதாரப் பிரிவு முற்றிலும் செயலற்றுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி செவ்வனே நடைபெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்