புது கட்சி பெயரை வெளியிட்ட - அரவிந்த் கேஜ்ரிவால் !

Saturday, November 24, 2012

ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பில் இருந்து சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகிய சமூக சேவகர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது அரசியல் இயக்கத்துக்கு இன்று ஒரு புதுப் பெயர் கொடுப்பதாக அறிவித்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இன்று புதிதாக ஏதாவது ஒரு பெயரை கட்சிக்குச் சூட்டி அறிவிப்பார் என்ற நிலையில், அவர் தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

" சாதாரண மனிதர் கட்சி "- என்ற பொருள்படும் "ஆம் ஆத்மி பார்ட்டி” என்ற பெயரைச் சூட்டி இன்று அறிவித்தார் அரவிந்த் கேஜ்ரிவால். புதுதில்லியில் கட்சியின் முதல் கூட்டம் அதிகாரபூர்வமாக இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் அவர் இந்தப் பெயரை அறிவித்தார். இன்று மாலை 5 மணி அளவில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். அந்த சந்திப்பின்போது, இந்தப் பெயரை அதிகாரபூர்வமாக ஊடகங்களிடம் அறிவிப்பார் என்று கூறப்பட்டது.

இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது, தேசியக் கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் 300க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

தேசிய கவுன்சில் தற்போது 30 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். கட்சியின் கொள்கைகளை தீர்மானிக்கும் உயர்மட்டக் குழுவாக இது அமையும். கட்சியின் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட அனைவரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இருப்பினும் ஆம் ஆத்மி கட்சி, மற்ற கட்சிகளைப் போல், அதிகார வரிசைப்படி அமையாது, இது பொதுமக்களுக்கான கட்சி என்று கூறப்பட்டது.