புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் தற்கொலை !

Tuesday, November 20, 2012

சென்னையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தலைமுறையில் வணிகச் செய்திகள் வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் நெடுஞ்செழியன். இவர் தனது மனைவியுடன் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தலைதீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு மனைவியுடன் சென்றுவிட்டு இருதினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிகாலை 3 மணிக்கு தனது வீட்டில் நெடுஞ்செழியன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அவருடன் பணி புரியும் சக பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்செழியன் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் செய்தித்துறையில் பணிபுரியும் சக பணியாளர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டுள்ளனர்.

புதிய தலைமுறை அஞ்சலி

நெடுஞ்செழியன் மறைவுக்கு புதியதலைமுறை தொலைக்காட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 27 வயதே ஆகும் நெடுஞ்செழியன், எப்போதுமே புன்முறுவலுடன் காணப்படுபவர். அனைவரிடமும் இனிமையாகவும், கலகலப்பாகவும் பழகக்கூடிய பண்பாளர்.

பணிகளை மிகவும் சிறப்பாகவும், விரைவாகவும், அனைவரும் பாராட்டத்தக்க வகையில் செய்து முடிப்பதில் நெடுஞ்செழியன் வல்லவர். அவரது மறைவுக்கு, புதிய தலைமுறை தனது அஞ்சலியை செலுத்துகிறது.

சிறந்த செய்தியாளரான அவரது இழப்பு, புதிய தலைமுறைக்கு மட்டுமன்றி ஊடக உலகத்திற்கே ஈடு செய்ய முடியாதது. நெடுஞ்செழியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.