கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பட்டியல் வெளியிட்டார்-அரவிந்த் கெஜ்ரிவால் !

Friday, November 9, 2012

சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மை காலமாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பா.ஜ., தலைவர் நிதின் கட்கரி, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா என பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். 

இன்று அவர் வெளிநாட்டில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பட்டியலை வெளியிட்டார். அதில், வெளிநாட்டு வங்கிகளில் 700 இந்தியர்கள் கருப்பு பணத்தை பதுக்கியிருப்பதாகவும் இந்த தகவல் மத்திய அரசுக்கு தெரியும் என்ற அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதன்படி ஜெனீவாவில் இருக்கும் ஹெ.எச்.பி.சி., வங்கியில் மட்டும் ரூ.6,000 கோடி பணம் பதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தொழிலதிபர்கள் அம்பானி சகோதரர்கள் தலா ரூ. 100 கோடி பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.500 கோடி பதுக்கியுள்ளது என்றார்.

ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல் ரூ.80 கோடி பதுக்கியுள்ளதாகவும், டாபர் நிறுவனத்தின் பர்மன் சகோதரர்கள் ரூ.25 கோடியும், மோடெக் மென்பொருள் நிறுவனம் ரூ. 2,100 கோடியும், காங்கிரஸ் எம்.பி., சந்தீப் டான்டென், அணு டான்டென் தலா ரூ.125 கோடியும் பதுக்கியுள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறினார்.

இவை தவிர பிர்லா குழுமத்தின் யஷோவர்மன் பிர்லா, ரிலையன்ஸ் நிறுவன குடும்பத்தைச் சேர்நத கோகிலே பென்னுக்கும் ஸ்விஸ் வங்கியில் கணக்கு இருந்தாலும், 2006ம் ஆண்டுக்கான பட்டியல் படி அவர்கள் கணக்குகளில் பணம் ஏதும் இல்லை என்றார்.

பிரணப் பதிலளிக்க வேண்டும் : கருப்பு பணம் பதுக்கியவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட போது முக்கிய தொழிலதிபர்கள் 450 பேரது வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை. அவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படாததற்கு காரணம் என்ன. அப்போது நிதியமைச்சராக இருந்த பிரணப் முகர்ஜி தலையீட்டின் காரணமாக சோதனை கைவிடப்பட்டதா? பிரணப் இப்போது ஜனாதிபதியாக இருக்கலாம் ஆனால் அவர் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றார்.