பீகார் முதல்வருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் பாகிஸ்தான் !

Saturday, November 10, 2012

பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஒரு வார பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். நேற்று கராச்சி நகருக்கு வந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சிந்து மாநில முதல் மந்திரி சையத் கய்யூம் அலிஷா, மற்றும் மாநில மந்திரிகள், தொழிலதிபர்கள் நிதிஷ் குமாரை வரவேற்றனர்.

'அனுபவ பரிமாற்றம்' என்ற கருத்தரங்கில் இன்று உரையாற்ற உள்ள நிதிஷ் குமார், முன்னதாக பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாகிட காரணமாக இருந்த முஹம்மது அலி ஜின்னாவின் சமாதியை பார்வையிடுகிறார்.

சிந்து சமவெளி நாகரிக காலத்தில் தலைநகரமாக இருந்து, தற்போது சிதிலமடைந்துள்ள மொகஞ்சதாரோ மற்றும் சாதோ பெலோ கோயில் ஆகியவற்றையும் அவர் பார்வையிட உள்ளார்.

இதற்கு முன்னர் 2003-ம் ஆண்டு அப்போதைய பீகார் முதல்வர் லல்லுபிரசாத் யாதவ், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவருக்கே உரித்தான பாணியில் லல்லுபிரசாத் பேசிய பேச்சு, பாகிஸ்தானியர்களை மிகவும் கவர்ந்தது.

கடந்த மாதம் குர்கானில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனும், தற்போதைய அரசியல் வாதியுமான இம்ரான் கான், நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசின் வளர்ச்சி திட்டங்களை வெகுவாக பாராட்டி இருந்தார்.

கராச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், எனது வருகையினால் இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள உறவு பலப்படும் என நம்புகிறேன். இரு நாடுகளுக்குமே அமைதி, நிரந்தரத்தன்மை, முன்னேற்றம் தேவையானதாக உள்ளது.

நான் அன்பு என்னும் செய்தியை உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன். ஒருவர் மீது உள்ளன்பு வைத்திருப்பவர் மட்டுமே அவரை தன்வீட்டுக்கு அழைப்பார். அதேபோல் தனது மனதில் அன்புக்குரியவரின் வீட்டுக்குதான் யாரும் செல்வார்கள் என்று குறிப்பிட்டார்.