விருதுநகர் மாவட்டத்தில் அமைதி திரும்பியது !

Friday, November 2, 2012

சிவகங்கையை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்திலும் நேற்று அமைதி திரும்பியது. முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜைக்கு, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பசும்பொன் செல்லும் இடங்களில் சில ஊர்களில் வன்முறை ஏற்பட்டது. இதனால், ஆனைகுளம், முத்துராமலிங்காபுரம், பச்சேரி ஆகிய ஊர்களிலம், நரிக்குடி அருகே முக்குளம் என்ற ஊரிலும் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

இந்த பகுதிகளில் மூன்று மாவட்ட எஸ்.பி.,க்கள் தலைமையில் 15 டி.எஸ்.பி.,க்கள் மற்றும் 500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் நேற்று ஈடுபடுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நேற்று இந்த பகுதிகளில் அமைதி நிலவியது. பதட்டம் தணியும் வரை காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, சிவகங்கையிலும் மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து, நேற்று முதல் துவக்கப்பட்டது.