பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு தொடர்பாக 10 பேரிடம் விசாரணை - பொதுமக்கள் மறியல்

Saturday, November 10, 2012

மதுரை அருகேயுள்ள புளியங்குளத்தை சேர்ந்த 20 பேர் ஒரு காரில் கடந்த 30-ந்தேதி பசும்பொன் கிராமத்திற்கு சென்றனர். அங்கு தேவர் குருபூஜையில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பினர். அவனியாபுரம் அருகே வந்து கொண்டு இருந்தபோது ஒரு 'மர்ம' கும்பல் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனார் காரில் இருந்த 20 பேரும் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இச்சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 4 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனுப்பானடி பழனி ஆறுமுகா நகரை சேர்ந்த அரசு ராமர் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து மதுரை 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் காவலில் வைக்க உத்தர விட்டார். இதை தொடர்ந்து அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு தொடர்பாக அனுப்பானடி பகுதியை சேர்ந்த மேலும் 2 பேரை நேற்றிரவு விசாரணைக்காக போலீசார் பிடித்து சென்றனர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பிடித்து செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த பின்னர் பிடிபட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் மறியலில் ஈடுபட்ட 8 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.