மறு ஏலத்திற்கு வரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் !

Friday, November 16, 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு மிகைப்படுத்தப்பட்டதால் மறுஏலத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். அதனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான இரண்டாம் கட்ட மறுஏலம் வரும் மார்ச் மாதத்திற்கு முன்பு நடத்தப்படும் என்றும் அவர் குறி்ப்பிட்டுள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், முதல் கட்டமாக நடைபெற்ற மறு ஏலத்தில் உச்சநீதிமன்றம் வகுத்த நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டதாக கூறினார். கொள்கை முடிவுகள் எடுப்பதை அரசின் வசம் விட்டுவிட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், கொள்கையை செயல்படுத்துவதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முதல் கட்ட மறுஏலத்தில் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான தொகையே அரசுக்கு வருவாயாக கிடைத்திருப்பது குறித்து குறிப்பிட்ட அவர், தேவையற்ற சர்ச்சைகளால் தங்க முட்டையிடும் பொன் வாத்தான தொலைத் தொடர்புத்துறை கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் எந்த ஒரு மசோதாவையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.