இந்தியாவின் முதல் பணக்காரர் இடத்தைப் பிடித்த முகேஷ் அம்பானி!

Thursday, October 11, 2012

இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ரூ.96 ஆயிரத்து 500 கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி முதலிடத் தில் உள்ளார். சீனாவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஹுருன், இந்திய பணக்காரர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. பங்குகள், சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பணக்காரர்கள் பட்டியலை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. 

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய பணக்காரர்களில் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.96 ஆயிரத்து 500 கோடி ஆகும். அடுத்த இடத்தில் ஏர்செல்-மிட்டல் நிறுவன தலைவர் எல்.என். மிட்டல் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.94 ஆயிரத்து 500 கோடி.

விப்ரோ நிறுவனம் அஸிம்பிரேம்ஜி, சன் பார்மசூட்டிக்கல் நிறுவனம் திலிப்ஷாங்கி, ஷபூர்ஜி பல்லோஞ்ஜி அண்ட் கோ (டாடா நிறுவனத்தில் மிகப் பெரிய பங்குதாரர்) பல்லோஞ்ஜி மிஸ்ட்ரா, ஈஸ்ஸா எனர்ஜியின் ஷாஷி மற்றும் ரவிரூயா, கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

முன்னணி கோடீஸ்வரர்கள் பட்டியலில் டி.எல்.எப். நிறுவனத்தின் குஷால் பால்சிங், கிராஸிம் நிறுவனத்தின் குமாரமங்கலம் பிர்லா. எச்.சி.எல். நிறுவனத்தின் சிவ் நாடார், பார்தி ஏர் டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் ஆகியோர் முதல் 4 இடத்தில் உள்ளனர். பணக்கார இந்தியர்கள் 100 பேர் பட்டியலில் 5 பெண் தொழில் அதிபர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் சாவித்திரி ஜிண்டால், இவருக்கு ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

இந்திய பணக்காரர்கள் 100 பேரில் 36 பேர் மும்பையை பூர்வீகமாக கொண்டவர்கள் 22 பேர் டெல்லியிலும், 15 பேர் பெங்களூரிலும் வசிப்பவர்கள். 5 பேர் வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் ஆவர். அவர்களில் எல்.என். மிட்டலும் ஒருவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.