வதந்திகளை நம்ப வேண்டாம் : அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் !

Saturday, September 8, 2012

சென்னை

கூடங்குளம் அணுவுலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழு, தாங்கள் வன்முறையைத் தூண்டும் விதத்தில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், வன்முறை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில்,

"கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஒரு வருடத்துக்கும் மேலாக அறவழியில், மென்முறையில் போராடி வரும் எங்கள் இயக்கத்தை களங்கப் படுத்துவதற்காக சில மாதங்களாக காணாமல் போயிருந்த சத்யசீலன் போன்றகாங்கிரஸ்காரர்கள் வீண் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

நாங்கள் வன்முறைப் போராட்டத்திற்குத் திட்டமிடுவதாகவும், போராட்டத்தில் இறந்துபடுபவர்களுக்கு நாங்கள் ஐந்து லட்சம் ரூபாய் உதவி வழங்குவோம் என அறிவித்திருப்பதாகவும் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.இந்த வதந்திகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். எங்கள் போராட்டம் எந்த வன்முறையும் இன்றி அறவழியில் தொடர்ந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது