சவுதி அரேபியாவின் அழகான இளவரசி இங்கிலாந்தில் தஞ்சம்?

Tuesday, July 10, 2012

சவுதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் ஆசிஷ் பின் சவுத்தின் பேத்தி சாரா, இங்கிலாந்தில் அரசியல் தஞ்சமடைய முயற்சி செய்து வருகிறார். குடும்பத்தினரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் பகிரங்கமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சவுதி அரேபியாவை நிறுவியவர் மன்னர் அப்துல் ஆசிஷ் பின் சவுத். இவரது மகன் தலால் அப்துல் ஆசிஷ் அல் சவுத். இவருடைய மகள் சாரா பின்ட் தலால் பின்அப்துல்லாசிஸ் அல் சவுத். வயது 38. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். கணவரை விவாகரத்து பெற்றுவிட்டார்.

மிகவும் அழகான இளவரசி என்பதால், லிட்டில் பார்பி என்று செல்லமாக அழைக்கப்பட்டார். குடும்பத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால் கடந்த 2007ம் ஆண்டு குழந்தைகளுடன் லண்டனில் குடியேறினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவரது பாஸ்போர்ட், விசா காலம் முடிந்து விட்டது. எனினும், குடும்பத்தினரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் அரசியல் தஞ்சம் அளிக்க வேண்டும் என்று இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்துக்கு சாரா கோரிக்கை விடுத்துள்ளார். சவுதி மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், பகிரங்கமாக தஞ்சம் கேட்பது இதுவே முதல் முறை. இதுகுறித்து சாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சவுதியில் என்னை பற்றி தவறான தகவல்கள் பரப்புகின்றனர். நான் மீண்டும் அங்கு சென்றால் குடும்பத்தினரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, அரசியல் தஞ்சம் கேட்டுள்ளேன். இது வருத்தமான விஷயம்தான். ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. இவ்வளவு நாட்கள் நான் மவுனம் காத்து வந்தேன். குடும்பத்தினருடன் உள்ள பிரச்னைகளை சுமூகமாக தீர்த்து கொள்ள முயற்சித்தேன். அது முடியாததால் இப்போது இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கேட்டுள்ளேன். இதை நான் பப்ளிசிட்டிக்காக செய்யவில்லை. இவ்வாறு சாரா கூறியுள்ளார். சாராவின் விசா முடிந்துவிட்டதால், அவர் சவுதிக்கு திருப்பி அனுப்படுவார்.

அப்போது அவரை கடத்தி தண்டனை வழங்க மன்னர் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சவுதி மன்னர் அப்துல்லா உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுகிறார். இளவரசர் நயீப் பின் அப்துல் ஆசிஷ் அல் சவுத் சமீபத்தில் காலமானார். இவர்தான் சாராவுக்கு ஆதரவாக இருந்தார். இவரும் இறந்துவிட்டதால், வேறு வழியின்றி இங்கிலாந்தில் தஞ்சம் கேட்டுள்ளார் என்று இங்கிலாந்து பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து இங்கிலாந்து அரசு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.