தேசியத் தலைவர் போன்ற தலைவரை வரலாற்றில் கண்டதே இல்லை!தமிழருவி மணியன்

Monday, July 2, 2012

தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற தலைவரை தமிழர்களின் வரலாற்றில் கண்டதே இல்லை. தமிழர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் ஈழம் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நான் எனது வாழ் நாளில் நிச்சயமாக ஈழம் மலர்வதைக் காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என தமிழருவி மணியன் தெரிவித்தார்.

சிட்னி தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெரும்பாலான தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தமிழீழம் உருவாவதற்கு தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்ற கருப்பொருளில் உரையாற்றினார்.

அவரது உரையின் சாராம்சம் வருமாறு:

இனிப்பாகப் பேசினால் அதில் உண்மை இருக்காது உண்மையைப் பேசினால் அது இனிப்பாக இருக்காது. உண்மையென்னவென்றால் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி தமிழகத் தமிழர்களாக இருந்தாலும் சரி தமிழர்கள் நாம் ஒற்றுமையாக இல்லை. தமிழர்களுக்கு ஓர் நாடு அமைய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்.

ஈழத்தில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஈழத்தில் ராஜபக்சவின் கொடுங்கோல் அரசு அவர்கள் மீது இன்று முழுமையான ஒரு வன்முறையைப் பிரயோகித்துக்கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

ஈழத்தில் வாழும் தமிழர்களால் இப்போராட்டத்தை முன்னெடுக்க முடியுமா எனக் கேட்டால் இன்றைய சூழலில் இல்லை என்பதே உண்மையான யதார்த்தம். தமிழர் பகுதிகளில் ஏழு தமிழர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் நிறுத்திவைத்துள்ளது சிறிலங்கா அரசு. அங்குள்ள மக்களுக்கு பேச்சுச் சுதந்திரம் கூட மறுக்கப்பட்டு அடக்கு முறைக்குள் வாழ்கிறார்கள்.

தமிழக அரசும் தமிழகத் தலைவர்களும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு விடுதலையைப் பெற்றுத்தருவார்களா என்று கேட்டால் வெளிப்படையான உண்மை அதற்கான சாத்தியப்பாடு இல்லை என்பதே.

தமிழகத் தலைவர்களைப் பொறுத்தவரையில் தங்கள் கட்சி சார்ந்த நலன்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். ஈழத் தமிழ் மக்களுக்காக வைகோ நெடுமாறன் போன்றவர்கள் இதய சுத்தியுடன் செயற்பட்டாலும் அவர்களின் பின்னால் மக்கள் பலம் பெரிதாக இல்லை.

இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரையில் அவர்களின் கொள்கை வகுப்பென்பது இந்திய நலன் சார்ந்திருக்குமே தவிர அது வேறு எதையும் கருத்திற்கொள்ளாது. அந்த வகையில் இந்துமா கடலில் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் கோட்பாட்டுடன் சிங்கள அரசின் பக்கம் நிற்குமே தவிர அது ஈழத் தமிழ் நலன்சார்ந்து இருக்காது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே முள்ளிவாய்க்காலின் பி்ன்னரான போராட்டம் முழுமையாகத் தங்கியுள்ளது. இதை புலம்பெயர்வாழ் ஒவ்வொரு தமிழர்களும் உணர்ந்து அவரவர் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் இருக்கின்ற அரசாங்கங்களின் கவனத்திற்கு சிறிலங்கா அரசு நடத்தி முடித்தது ஒரு இனப்படுகொலையே என்பதை கொண்டு சென்று சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்துவதோடு சர்வதேச அரசுகளின் ஆதரவை தமிழர்கள் பக்கம் திருப்பவேண்டும்.

தமிழர்களின் விடுதலைப்போரில் சனல் 4 ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. அதையும் ஆதாரமாகக்கொண்டு சர்வதேச அரசுகளின் ஆதரவையும் கவனத்தையும் எங்கள் பக்கம் திருப்பவேண்டும்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் நாங்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். தமிழகச் சஞ்சிகைகளில் ஈழத் தமிழர்களின் நிலைகுறித்து நான் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

2014ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அரசு ஆட்சி இழப்பதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக இருப்பதனாலும் இன்று உலகத்தின் கவனம் ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் கரிசனை கொண்டிருப்பதாலும் இந்தியாவில் அமைய இருக்கும் புதிய அரசாங்கத்தை ஈழத் தமிழர்களின் விடுதலைக்குத் தடைபோடாத வகையில் அவர்களது ஆதரவைப் பெற்று எமது விடுதலையைப் பெற்றெடுக்கக் கூடிய சூழ்நிலைகள் நிச்சமாக உருவாகும்.

இவற்றைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் உணர்ந்து ஒற்றுமையாகச் செயற்பட்டால் ஈழம் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நான் எனது வாழ் நாளில் நிச்சயமாக ஈழத்தை காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.