கொச்சி: கொல்லம் அருகே இந்திய மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொன்ற விவகாரம் முடிவுக்கு வருகிறது. இறந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி வழங்கி இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் 2 இத்தாலிய கடல்படை வீரர்களையும் மீட்டு கொண்டு செல்ல திட்டம் போடப்பட்டுள்ளது.
கடந்த பிப்., மாதம் 15ம் தேதி, "என்ரிகா லக்சி' என்ற இத்தாலிய எண்ணெய் கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில், 2 மீனவர்கள் பலியாகினர். மீனவர்களை கடல் கொள்ளையர்கள் என நினைத்து சுட்டதாக அவர்கள் கூறினார். ஜெலஸ்டின், ஆஜீஸ்பிங்க் இருவரில் ஒருவர் கன்னியாகுமரியை சேர்ந்தவர். மற்றொருவர் கேரளாவை சேர்ந்தவர். இருவரும் இறந்ததை அடுத்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இத்தாலி நாட்டு பாதுகாவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை மீட்பது தொடர்பாக அந்நாட்டில் இருந்து அதிகாரிகள் இந்திய வெளியுறவு துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினர்.
இதற்கிடையில் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூ. 70 லட்சம் வரை தருவதாக பேசப்பட்டது. ஆனால் இவர்களது குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இந்நிலையில் தலா ஒரு கோடி தருவதாக பேசப்பட்டு சம்மதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இறந்த மீனவர்கள் குடும்பத்தினரும், இத்தாலிய அரசு தரப்பிலும் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்வர். நாங்கள் கோர்ட்டுக்கு வெளியே இந்த விவகாரத்தை செட்டில் செய்து கொள்கிறோம் என மனுவில் கூறப்படும். தொடர்ந்து வழக்கு இறுதிக்கு வரும். இந்த ஒரு கோடி பேரம் தொடர்பான பேச்சில் மீனவர்களின் வக்கீல்களும், இத்தாலிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த செட்டில்மென்ட் முடிந்ததும் , இதனை தொடர்ந்து இத்தாலியர்கள் 2 பேரை விடுவிக்கும் முயற்சி தொடரும். இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டில் இத்தாலியர்கள் மீதான எப்.ஐ.ஆர்.,ரை ரத்து செய்யக்கோரும் மனுவும் தாக்கல் செய்ய இத்தாலிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.