தொடர்ந்து நடக்கும் இலங்கை கடற்படையின் அட்டுழியம் -கண்டு கொள்ளதா அரசுகள்.

Monday, September 15, 2014

பூம்புகார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான விசைபடகு மற்றும் பைபர் படகு மூலம் நாகை அருகே கோடியக்கரை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர்அத்துமீறி நுழைந்து வலைகளை கிழித்தும், பல்வேறு ஆயதங்களால் படகுகளை உடைத்தும், 21 மீனவர்களை சிறைபிடித்து அவர்களது விசைப்படகை கைப்பற்றியுள்ளனர்.

வலையில் சிக்கியிருந்த ஒன்றரை டன் மீன்களையும் அள்ளிச்சென்றனர். இதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் பூம்புகார் பகுதியை சேர்ந்த மீனவர்கள்
வேலாயுதம், கலைமணி, கனகராஜ், இந்திரன், சுப்பிரமணியன், பார்த்திபன், சக்திவேல், பாலமுருகன், வேலாயுதம், கலியபெருமாள், மாணிக்கவேல், விஜய், மாவீரன், சூர்யா மற்றும் வானகிரியை சேர்ந்த மீனவர்கள் விஜயபாலன், ஞானவேல், பிரதீப், வினோத், ராஜேஷ் மற்றும் புதுக்குப்பம் மீனவர் பழனியாண்டி ஆகியோர். இதில் பூம்புகாரை சேர்ந்த மீனவர் செல்வராஜ், புதுக்குப்பத்தை சேர்ந்த மீனவர் சரண்ராஜ் ஆகியோரை அடித்து விரட்டியுள்ளனர். இவர்கள் மூன்று பைபர் படகுகளை மீட்டு வந்தனர். இதனால் பூம்புகார் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இவ்வாறு அத்துமீறி நாகை மாவட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறைப்பிடிப்பது வழங்கமாக உள்ளது. அந்த வகையில் கடந்த 9ம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்கள் அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டுமென பூம்புகார், வானகிரி, புதுக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுதொடர்பாக பூம்புகாரில் கடந்த 13ம்தேதி கிராம பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது மீனவ பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து மீனவ பஞ்சாயத்தார்கள் கூறுகையில்: "மீனவர்களாகிய நாங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. எனவே அத்துமீறி செயல் படும் இலங்கை கடற்படையினர் எங்கள் சமூக மக்களை அடிக்கடி சிறைபிடித்து வருகின்றனர். இந்திய எல்லை தாண்டி நாங்கள் செல்வதில்லை. எங்களுக்கு அந்த நோக்கமும் அரவே கிடையாது.


இந்த பிரச்சினையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க எந்த அரசு வந்தாலும் எங்களை கண்டு கொள்வதில்லை. மேலும் இந்தப்பிரச்சினைக்கு மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சிவராஜ் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு காணவேண்டும்.

இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நாளை கோயம்புத்தூரில் சந்தித்து இந்த பிரச்சினையை முறையிடுவோம். இதிலும் தீர்வு கிடைக்கவில்லையென்றால் எங்களது உரிமையை உதாசீனப்படுத்தும் அரசுகளை கண்டித்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்வோம்." இவ்வாறு கூறினர்.

மேலும் இதுபற்றி மீனவர்கள் கூறுகையில்: "பிச்சை எடுத்துதாம் பெருமாளு. அதை பிடுங்கி தின்னுதாம் அனுமாரு என்பதைப்போல நாங்கள் உயிரை பணயம் வைத்து மீன்பிடத்து வருகிறோம். அந்த மீன்களை துளி கூட வியர்வை சிந்தாமல் எங்களை தாக்கி பிடுங்கி செல்கின்றனர் இலங்கை கடற்படையினர். கடலில் ஆயிரம் ஆபத்துகளை சந்திப்பது ஒருபக்கம்ன்னா இந்த கடற்கொள்ளையர்கள்ட சிக்கித் தவிப்பது பேராபத்தாக இருக்குது. நாங்களெல்லாம் இந்தியக் குடிமகன்கள் இல்லையா? எங்களுடைய உரிமையை காப்பாற்றுவதில் ஏன் இந்திய அரசு கவனம் செலுத்துவதில்லை?"என வருந்தினர்.

நன்றி-நக்கீரன்