வழக்கு தொடர கமலுக்கு உரிமை இல்லை -அரசு தரப்பு வாதம்.

Tuesday, January 29, 2013

சென்னை: விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே விற்றுவிட்ட கமல் ஹாஸனுக்கு, அரசுக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமை இல்லை என்று தமிழக அரசு அதிரடி வாதத்தை நீதிமன்றத்தில் வைத்துள்ளது.

இந்தப் படம் முஸ்லிம்களை மிக மோசமாக சித்தரித்துள்ளதாகக் கூறி தமிழக அரசிடம் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் ஒன்றுபட்டு குரல் கொடுக்க, படத்துக்கு 2 வார காலம் தடை விதித்ததது தமிழக அரசு. இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களும் கடிதம் கொடுத்துள்ளனர் அரசுக்கு. இவற்றை எதிர்த்து இரு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார் கமல்.

இந்த வழக்குகளின் விசாரணை மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. இடையில் படத்தையும் நீதிபதிகள் குழு பார்த்து முடித்தது. இந்தப் படத்துக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது...? ஏன் விலக்கக் கூடாது? என்று அரசுத் தரப்பும் கமல் தரப்பும் தீவிரமாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விவாதம் செய்து வருகின்றன. இதில் அரசுத் தரப்பு வைத்துள்ள ஒரு வாதம் மிக முக்கியாமானது. "விஸ்வரூபம் என்ற product-ஐ கமல்ஹாஸன் வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டார். அதன் எந்த உரிமையும் இப்போது அவரிடம் இல்லை. எனவே இந்தப் படத்தின் தடைக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமை கமல்ஹாஸனுக்கு இல்லை. மேலும் இந்தப் படம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு எதிராகவும் உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி அரசு இந்தத் தடையை விதித்துள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.