தவறான தணிக்கை என்று நிருபிக்காமல் போனால் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினமா செய்ய தயாரா?-தணிக்கை குழு தலைவர் லீலா சாம்சன்.

Thursday, January 31, 2013

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை ஏற்க முடியாது என்று மத்திய தணிக்கை குழு தலைவர் லீலா சாம்சன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த தடை நடவடிக்கை கருத்து சுதந்திரத்தில் தலையீடும் வகையில் உள்ளதாக மத்திய தணிக்கை குழு தலைவர் லீலா சாம்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இந்திய திரையுலகின் மாபெரும் கலைஞனுக்கு நியாயமற்ற வகையில் நீதி கிடைத்துள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு முறைகேடாக தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை . விஸ்வரூபம் படத்திற்கு முறைகேடாக தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் வாதம் ஆட்சேபணைக்குரியது என்றும் லீலா சாம்சன் கூறினார்.

பதவிக்கு பொருத்தமற்ற ரீதியில் பேசியுள்ள தமிழகத்தை சேர்ந்த தலைமை வழக்கறிஞர் தமது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். இதுவரை ஆயிரக்கணக்கான படங்களுக்கு நான் தணிக்கைச் சான்றிதழ் வழங்கியுள்ளேன்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையை தான் ஏற்க தயார் என்றும் கூறியுள்ளார். மேலும் என் மீது உள்ள குற்றச்சாட்டை தலைமை வழக்கறிஞரால் நிரூபிக்க முடியாமல் போனால், அவர் பதவியை ராஜினமா செய்ய தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் சமூக அக்கறையுடனேயே சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறிய அவர், விஸ்வரூபம் படத்திற்கு முறைகேடாக தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய்யானவை என்று ஒரு கண்டனத்தை தமிழக அரசிற்கு விடுத்துள்ளார்.