சென்னை விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் .வைக்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்.

Saturday, January 19, 2013

சென்னையில் புதிதாக திறக்கப்படவுள்ள 2-வது உள்நாட்டு விமான நிலையத்திற்கு பாரத ரத்னாவும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர் எம்.ஜி.ஆரின் பெயரை வைக்கவேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:-

சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப்பட்ட நவீனமயமான 2-வது சர்வதேச விமான நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்ட 2-வது உள்நாட்டு விமான நிலையம் துவக்க விழாவிற்கு தயாராக உள்ளது என்பதை அறிகிறேன். சென்னை மாநகரத்தின் உள்கட்டுமான பணிக்கும், இந்நகருக்கு மிக அதிக எண்ணிக்கையில் வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் நலன்களுக்கும் மிகவும் பயன்பாடு உள்ளதாக இந்த புதிய விமான நிலையங்கள் இருக்கும் என்பது மிகவும் வரவேற்புற்கு உரியதாகும். இதை மனதார நான் வரவேற்கிறேன்.

தற்போது சென்னை விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான மையத்திற்கு பெருந்தலைவர் காமராஜ் பெயரும், சர்வதேச விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு பெருந்தலைவர்களும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் ஆவார்கள். இத்தகைய சூழ்நிலையில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படவுள்ள 2-வது உள்நாட்டு விமான நிலையத்திற்கு தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற முதல்வராகவும், அனைவரின் இதயங்களிலும் வீற்றிருப்பருமான பாரத ரத்னா, புரட்சித்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆரின் பெயரை வைப்பது மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயர் தமிழக மக்களின் இதயத்தில் என்றென்றும் நீக்கா இடம்பெற்றிருப்பதாகும். தமிழகத்தின் பெருந்திரளான மக்களால் மதிக்கக்கூடியவராகவும், எப்போதும் அவர்களால் புகழ்ந்து பேசப்படக் கூடியவராகவும் இருப்பவரின் பெயரை விமான நிலையத்திற்கு வைப்பதை பொதுமக்கள் மிகவும் வரவேற்பர்.

மத்திய அரசானது என்னுடைய இந்த கோரிக்கையை பரிசீலித்து 2-வது உள்நாட்டு விமான நிலையத்தின் துவக்கவிழாவிற்கு முன்னதாகவே உரிய முறையில் இந்த அறிவிப்பை வெளியிடுமேயானால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். மீண்டும் ஒருமுறை சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2-வது உள்நாட்டு விமான நிலையத்திற்கு புரட்சித்தலைவரின் பெயரை வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா மத்திய அமைச்சர் அஜீத்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.