மதுவினால் சமுதாயம் சீர்கெடுகிறது-வைகோ.

Thursday, December 20, 2012

சிவகாசி: தமிழகம் மதுவின் பிடியில் இருந்து விலக வேண்டும். மக்கள் சக்தியை திரட்டினால் தான் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும். அதற்காகவே இளைய தலைமுறையினரை ஒருங்கிணைத்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல் படுத்த வலியுறுத்தி கடந்த 12ம் தேதி உவரியில் இருந்து மதுரை வரை வைகோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விழிப்புணர்பு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். நேற்று மாலை விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியிலிருந்து தொடங்கிய பிரசார பயணத்தின் போது வைகோவுக்கு பல்வேறு கிராமங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

சிவகாசிக்கு வந்த அவருக்கு வழிநெடுகிலும் சாலையில் இருபுறமும் ஏராளமானவர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர். பிரசாரத்தின் போது சிவகாசி புறவழிச் சாலையில் பெருந்திரளானவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டபடியால் இது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அழித்து விடும். எனவேதான் மதுவிலக்கு கோரிக்கைக்கு கட்சிகளையும், சாதி, மதங்களையும் கடந்து அனைத்து தரப்பினர்களும் ஆதரவு தெரிவித்து வரவேற்றுள்ளனர். மதுவிலக்கிற்கு முன் உதாரணமாக காந்தி பிறந்த மண் குஜராத் மாநிலம் விளங்குகிறது. தமிழகம் மதுவின் பிடியில் இருந்து விலக வேண்டும். மக்கள் சக்தியை திரட்டினால் தான் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும். பல்வேறு எல்லைகளை கடந்து தமிழக மண்ணுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து வருகிறேன்.

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பஸ்சில் செல்லும்போது அவரை மது அருந்திய நபர்கள் நாசப்படுத்திய விவகாரம் இன்றைக்கு பாராளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசு என்ன பரிகாரம் செய்யப்போகிறது. இதற்குண்டான மதுவின் மூல காரணத்தையே ஏற்க அரசு மறுக்கிறது. மதுவிலக்கு அமுல் செய்யப்பட்டால் தெருவுக்குதெரு வீதிக்கு வீதி அரசு திறந்துள்ள மதுக் கடைகள் இருக்காது. தமிழகத்தின் எதிர் காலத்தை நிர்ணயிக்கின்ற இளம் தலைமுறையினரிடம் எங்களது போராட்டம் நியாயம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

அறவழிச் சிந்தனையாளர்கள் பலர் வாழ்ந்த தமிழ்நாட்டையும், தமிழ் சமூகத்தையும் மதுவின் மூலமாக பாழாக்க விட மாட்டோம் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம் என்றார் வைகோ.