வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி !

Friday, November 23, 2012


சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை மறைந்தார்.

அவரது மறைவினையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தா.பாண்டியன் இரங்கல்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

திமுக சேலம் மாவட்டச் செயலாளராகவும், மாநிலத் தலைமைக்குழுவின் முக்கிய பொறுப்புக்களிலும், திமுக அமைச்சரவையிலும் தொடர்ந்து அமைச்சராகப் பொறுப்பேற்றுப் பணிபுரிந்து வந்த மூத்த அரசியல்வாதி வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டு, ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தார்க்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.