மதுரையில் பந்த்-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

Wednesday, November 7, 2012

மதுரை: தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மதுரையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவதன் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவர் குருபூஜை


அக்டோபர் 30 ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு ஏராளமானோர் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றனர். அப்போது பரமக்குடி அருகே ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் சிலைமானை அடுத்த புளியங்குளத்தை சேர்ந்த 20 வாலிபர்கள் பசும்பொன் கிராமத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது ரிங்ரோடு பகுதியில் அவர்களது வாகனம் மீது சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் காரில் இருந்த டிரைவர் உள்பட 20 பேரும் படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள சில தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் பெரிய ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலன் அளிக்காமல் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கடையடைப்பு போராட்டம்

இந்தநிலையில் இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்தும், இதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், நீதி விசாரணை நடத்தக்கோரியும் தேவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இதனையொட்டி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் இன்று ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக, மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.