பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த மும்பை பெண்கள் விவகாரத்தில் நடவடிக்கை !

Wednesday, November 21, 2012

பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தது தொடர்பாக மும்பையில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் கூறியுள்ளார்.

சிவசேனா கட்சி நிறுவனர் பால் தாக்கரே மறைவைத் தொடர்ந்து மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஆனால் அச்சத்தினால்தான் இந்த கடையடைப்பு என்றும், மரியாதைக்காக அல்ல எனவும் சஹீன் தாதா என்ற பெண் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை அவரது தோழி ரேனு லைக் (LIKE) செய்துள்ளதையடுத்து இருவரையும் கைது செய்த போலிசார் , பிணையில் வெளிவரக்கூடிய வழக்கு என்பதால் இருவரையும் விடுவித்தனர்.

இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு, மகாராஷ்டிரா முதல்வர் சவானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

எனவே இந்த விவகாரம் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர் போலிஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், அந்த அறிக்கை இன்று தனக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் தெரிவித்தார்.