ஆந்திராவில் வெள்ளம்: 3வது நாளாக ரெயில்கள் ரத்து!

Tuesday, November 6, 2012

நீலம் புயல் காரணமாக ஆந்திராவின் பல பகுதிகளில் கனமழை கொட்டியது. ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.

விசாகப்பட்டினம்- விஜயவாடா இடையே ரெயில்வே தண்டவாளம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் ரெயில்வே பாலத்தை மூழ்கியபடி வெள்ளம் பாய்கிறது.

இதனால் நேற்று முன்தினம் முதல் ரெயில் போக்குவரத்து முடங்கியது. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இன்று 3-வது நாளாக சென்னை- அவுரா மெயில், அவுரா- சென்னை மெயில், விலாஸ்பூர்- திருப்பதி எக்ஸ்பிரஸ், ராயகடா- விஜயவாடா பாசஞ்சர் ரெயில், விசாகப்பட்டினம்- ராஜமுந்திரி, விசாகப்பட்டினம்- நரசாபூர், செகந்திராபாத்- விசாகப்பட்டினம் செல்லும் 3 ரெயில்கள் உள்பட பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

வடமாநிலங்களில் இருந்து சென்னை வரும் ரெயில்கள் தாமதமாக புறப்படுகிறது. இதனால் விஜயவாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய ரெயில் நிலையங்களில் பயணிகள் முடங்கி கிடக்கிறார்கள். தேவையான குடிநீர், உணவு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

ரெயில் எப்போது இயங்கும் என்ற தகவல் கூட அவர்களால் பெற முடியவில்லை. மழை வெள்ளத்தால் ரெயில்வே துறைக்கு மட்டும் ரூ. 200 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. சேதம் அடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.