ஊழல்வாதிகளுக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ள மத்திய அரசஅன்வர் மணிப்பாடி

Wednesday, October 31, 2012

கர்நாடக மாநிலம், அமாநாத் கூட்டுறவு வங்கியில், 2,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, வழக்கு நிலுவையில் உள்ள போது, ரகுமான் கானுக்கு மத்திய அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவி வழங்கியது சரியல்ல,” என, கர்நாடகா மாநில சிறுபான்மையினர் கமிஷன் தலைவர், அன்வர் மணிப்பாடி கூறினார்.ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர், ரகுமான் கான். கர்நாடகாவிலிருந்து, ராஜ்யசபா எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்ட இவர், சமீபத்திய, மத்திய அமைச்சரவை மாற்றத்தில், சிறுபான்மையினர் நலத்துறைக்கான, கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பதவியேற்றவுடன் அவர் மீதான, ஊழல் புகார் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.கர்நாடகா மாநில, சிறுபான்மையினர் கமிஷன் தலைவர், அன்வர் மணிப்பாடி கூறியதாவது:பெங்களூரு அமாநாத் கூட்டுறவு வங்கியில் நடந்த, 2,000 கோடி ரூபாய் ஊழல் புகாரில், மத்திய அமைச்சர் ரகுமான் கான் பெயரை, ரிசர்வ் வங்கி, தங்கள் அறிக்கையில் சேர்த்துள்ளது. இந்நிலையில், அவருக்கு, மத்திய அமைச்சர் பதவி அளித்திருப்பது, பொது மக்களுக்கு, குறிப்பாக, சிறுபான்மை இனத்தவருக்கு அவமானமாக கருதப்படுகிறது.அவர், மத்திய அமைச்சராக பதவியேற்ற நாள், மத்திய அரசுக்கு கறுப்பு தினம். அமாநாத் வங்கியின் தலைவராக அவர் இருந்த போது, “கே.கே.கல்வி அறக்கட்டளை’க்கு, விதிமுறைகளை மீறி, அதிகப்படியாக பணத்தை பெற அனுமதித்துள்ளார்.இந்த அறக்கட்டளையில், ரகுமான் கான் மனைவியும், அவரது மூன்று மகன்களும், அறங்காவலர்களாக உள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட தொகையை விட, அதிகமாக எடுக்க, இவர் கையெழுத்திட்ட பேப்பர்கள், தற்போது காணாமல் போயுள்ளன. இதன் மூலம், 2,000 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.இது குறித்து, லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. அமாநாத் கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த போது, அவர் கடன் வழங்கிய, கட்டட கான்ட்ராக்டர்கள் அனைவருமே, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள்.

ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ள தொகைக்கு மேல், கடன் கொடுக்க அனுமதியளித்தது, வங்கி விதிமுறைகளை மீறியதாகும். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விசாரணை நடத்தி, அறிக்கை தயாரித்துள்ளது.அந்த, அறிக்கையில், “ரகுமான் கான் உட்பட, ஐந்து பேர், இயக்குனர்களாக இருந்த நேரத்தில், விதிமுறைகளை மீறி, கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுத்த கடன்களை, திரும்ப பெற முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, ரகுமான் கான் உட்பட, ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ரகுமான் கான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி உட்பட, பலரும் இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மங்களூரு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா, கர்நாடகாவிலுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை பற்றி விமர்சித்து பேசியவர், ஊழல் புகாரில் சிக்கியுள்ள ஒருவரை மத்திய அமைச்சரவையில் சேர்த்து கொண்டது எந்த வகையில் நியாயம்?அமாநாத் வங்கி ஊழல் மட்டுமின்றி, வக்ப் வாரிய சொத்துகள் மோசடி புகாரிலும் ரகுமான் கானுக்கு தொடர்புள்ளது. பிஜாப்பூர் லோக் ஆயுக்தா போலீசார் பதிவு செய்துள்ள புகாரில், ரகுமான் கான் உட்பட, 13 வக்ப் வாரிய உறுப்பினர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில், ரகுமான் கானுக்கு, மத்திய அமைச்சரவையில் இடமளித்திருப்பது வேதனைக்குரிய செயல். இவ்வாறு, அன்வர் மணிப்பாடி கூறினார்