வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல் !

Monday, October 29, 2012

வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் வரும் 31ஆம் தேதி நாகைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மேலும், தமிழக கடற்கரையோர பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். கடந்த 25 ஆம் தேதி வங்க கடலில் அந்தமான் நிக்கோபார் தீவிற்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. அது வலுபெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது.

அதனை தொடர்ந்து இன்று காலை ஐந்து 30 மணியளவில் அந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை வடமேற்கு நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், கடலோர மாவட்டங்களில் கனமழையும், சென்னை உட்பட பிற மாவட்டங்களில் நல்ல மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                                                       courtesy-puthiya thalaimurai