இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள பாலஸ்தீனத்தில் நேற்று நள்ளிரவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதனால் ஜெருசலம் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ரமல்லா, ஜெனின் ஆகிய நகரங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
பல வினாடிகள் பூமி குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். இதனால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்து தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். நீண்டநேரம் ரோடுகளில் தஞ்சம் அடைந்த அவர்கள் பதட்டம் மற்றும் பரபரப்பு அடங்கியவுடன் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
நேற்று அதே நேரத்தில் பாலஸ்தீனம் அருகேயுள்ள இஸ்ரேலிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் டெல்அவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். இதற்கிடையே 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் கடற்கரையில் 19.8 கி.மீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.