பெண்களுக்கு எதிராக தொடரும் ஆசிட் வீச்சு சம்பவங்கள்-இளம்பெண் மீது ஆசிட் வீச்சு.

Thursday, January 31, 2013

புதுச்சேரியில் ஆசீட் வீச்சுக்கு ஆளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் வினோதினியின் நினைவுகள் கூட நம் மத்தியில் இன்னும் மறையவில்லை. நேற்று தான் அவர் தாக்கப்பட்ட வழக்கில் காரைக்கால் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கம் திருவள்ளூவர் சாலையில் உள்ள இணையதள மையம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் நடந்துள்ளது.
ஆசிட் வீசிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்னும் நபர் அங்குள்ள ஸ்ரீ இணையதள மையத்தில் பணியாற்றி வந்த பெண்ணை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால் அந்த இணையதள மையத்திற்கு வந்த விஜயபாஸ்கர் திடீரென அந்த பெண் மீது ஆசிட்டை வீசியுள்ளார். இதில், அவரது முகம், முதுகு மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தன. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். இதையடுத்து, விஜயபாஸ்கர் மீது ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட விஜயபாஸ்கர் பிரபல மென்பொருள் நிறுவனம் ஒன்றில் கேன்டீன் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் பாரிமுனைப் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து ஆசிட் வாங்கியதாக கூறப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று ஒரு புறம் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.தொடரும் ஆசிட் வீச்சு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது??