மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ நடைபயணம்.

Friday, December 7, 2012

சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் 12-ந் தேதியன்று திருநெல்வேலி மாவட்டத்தின் உவரியிலிருந்து மதுரை நோக்கி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,



இன்று தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள், பஞ்சமா பாதகங்கள் அனைத்துக்கும், மதுவே அடிப்படைக் காரணம் ஆகும். அண்ணா மறைவுக்குப்பின் ஆட்சி பீடத்துக்கு வந்த அரசுகள், போட்டி போட்டுக்கொண்டு மதுவைப் புகுத்தியதன் தீய விளைவு, படிப்படியாக வளர்ந்து, இன்று நினைக்கும்போதே மனதைப் பதற வைக்கும் விபரீத நிலைமை ஏற்பட்டு விட்டது.

மதுவிலக்கு இருந்தால், கள்ளச்சாராயம் பெருகும் என்பது, முட்டாள்தனமான வாதம் ஆகும். குற்றத் தடுப்புச் சட்டங்கள் இருந்த போதும், கொலையும், களவும், குற்றங்களும் நடக்கின்றன என்பதற்காக, இந்தச் சட்டங்களை அரசுகள் இரத்துச் செய்ய முடியுமா? முடியாது.

இலைமறை காய்மறையாக, ஒளிந்தும் மறைந்தும் மது அருந்திய நிலை மாறி, இன்று தமிழகத்தில் மது அருந்துவது, அன்றாட வழக்கமாக ஆகி விட்டது. ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகள்; வீதிக்குவீதி ஒயின் ஷாப்கள். இதனால், பேராபத்து ஏற்பட்டு விட்டது.

குடிக்கு அடிமையாகி விட்ட ஓர் ஏழைத்தமிழன், ஒவ்வொரு நாளும் ஒரு குவார்ட்டர் பிராந்தி குடித்தால், ஐந்து ஆண்டுகளில், டாஸ்மாக் கடையில், 1 லட்சத்து 26 ரூபாய் இழக்கிறார். அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருள்களின் மதிப்பு, சுமார் 16 ஆயிரம் ரூபாய் மட்டும்தான்.

‘உழைப்பே உயர்வு தரும் என்ற கோட்பாட்டையே சிதைக்கும் கேடும், இலவசங்களால் நேர்கிறது.

இளைஞர்கள் மது அருந்துகிறார்கள். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மாணவர்களில் பலர் இந்தக் கொடிய பழக்கத்துக்கு நாளும் அடிமையாகி வருகிறார்கள். புள்ளி விவரங்களைக் குறிப்பிடுவதற்கே, மனம் கூச்சப்படுகிறது. ஆம்; பெண்களும் குடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஐயோ, நாம் எங்கே போகிறோம்? அனைத்துமே பாழாகுமே? கேடு விளையுமே?

மதுப்பழக்கம் பெருமளவில் மக்களை வளைத்துவிட்ட நிலையில், இனி மீள முடியுமா? மீட்க முடியுமா? என்று சிலர் மலைத்து நிற்கலாம்.

ஆனால், மதுவின் கோரப்பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்தாக வேண்டியது இமாலயப் பணி என்ற போதிலும், செய்து முடித்திட உறுதி எடுத்துக் கொண்டே, முழு மதுவிலக்கைத் தமிழகத்தில் நிலைநாட்ட, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அறப்போரைத் தொடங்கி உள்ளது.

டாஸ்மாக் கடைகள், ஒயின் ஷாப்கள், மதுக் கேளிக்கை விடுதிகளால், தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிட்ட சம்பவங்களை எண்ணிப் பாருங்கள்.

மது அருந்தப் பணம் தராத தாயைக் குத்திக் கொன்ற மகன்;

மதுவெறியால் மகளைப் பெண்டாள முனைந்த தகப்பன்;

சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தையை, பாலியல் இச்சைக்குப் பலியிட முனைந்த காமுகன்!

இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ?

உங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை, இத்தகைய கொடுமை தாக்கினால், என்ன ஆகும் என்று எண்ணிப் பாருங்கள்.

எனவேதான், ‘முழு மதுவிலக்கு; அதுவே எமது இலக்கு" என நெஞ்சிலே உறுதி கொண்டு, நானும், எனது தோழர்களும், ஊர் ஊராக, வீதி வீதியாக வந்து நாட்டு மக்களைச் சந்திக்கிறோம்; வேண்டுகிறோம்.

டிசம்பர் 12- ந் தேதி நெல்லை மாவட்டம் உவரியில் நானும் 1200 இளைஞர்களும் மூன்று மூன்று பேராக அணிவகுத்து, போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல், ஊர் ஊராக மக்களைச் சந்தித்து, மதுவினால் ஏற்படும் பெரும் தீங்கினை எடுத்துரைத்து, 400க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், வழிநெடுகிலும், பேரூர்களிலும், நகரங்களிலும் பிரசாரம் செய்யும் நடைப்பயணத்தை 25-ந் தேதி, மதுரை மாநகரில் நிறைவு செய்கிறோம்.

இதே காலகட்டத்தில், டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதிவரை, ஒருவார காலம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், மாநகரங்கள், நகரங்கள், கிராமங்களில் மதுவிலக்குப் பிரச்சார நடைப்பயணத்தை கழகத் தோழர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

மக்களிடம் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு, அமைதி வழியில், அறவழியில், கண்ணியமான முறையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கடைபிடித்து, பிரசாரப் பயணம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.