தொண்டர்களுடன் நடுரோட்டில் தூங்கி, சுட்டெரிக்கும் வெயிலிலும் போராடும் மக்கள் தலைவர் வைகோ!

Thursday, September 20, 2012


இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடத்தச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய பிரதேச எல்லையில் தொண்டர்களுடன் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில்,நேற்று இரவிலிருந்து தரையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றார்.


மத்திய பிரதேச மாநிலம், ராய்சென் மாவட்டம் சாஞ்சியில் புத்த மற்றும் இந்திய அறிவுசார் கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது.சுமார் ரூ.200 கோடி செலவில் அமைய உள்ள இந்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.

இவ்விழாவில் கலந்துகொள்ள ராஜபக்ச நேற்று டெல்லி வந்துவிட்டார்.

இந்நிலையில், ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழா நடக்கும் சாஞ்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார்.

இதற்காக, அவர் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் கடந்த 17-ம் தேதி சென்னையில் இருந்து 21 பஸ்களில் சாஞ்சி புறப்பட்டுச் சென்றார்.

நேற்று வைகோவும், அவருடன் சென்ற 750 தொண்டர்களும் மத்திய பிரதேச எல்லையான பட்சிரோலி நகரை சென்றடைந்தனர்.

ஆனால் பாதுகாப்பு கருதி அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2000 க்கும் அதிகமான பொலிஸார் அவர்களை மேலும் முன்னேறவிடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தினார்கள்.

நாங்கள் இந்திய குடிமக்களா இல்லையா? எங்களை தடுத்து நிறுத்திவிட்டு கொலைகாரன் ராஜபக்சவை வரவேற்கிறீர்களா..? என்று கோசத்துடன் பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ, நடுரோட்டில் அமர்ந்தபடியே தனது போராட்டத்தை இரவு முழுவதும் தொடர்ந்தார்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வைகோவின் போராட்டத்துக்கு பட்சிரோலி பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநில எல்லையில் நடுரோட்டில் அமர்ந்து வைகோ போராட்டம் மேற்கொண்டுள்ளார். விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராடிய வைகோ, தற்போது சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தமத கல்வி நிலைய தொடக்க விழாவில் பங்கேற்க டில்லி வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு பேருந்துகளில் சென்றனர்.

இவர்கள் மகாராஷ்டிரம்- மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள பந்துர்னா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து அதே இடத்தில் மாலை 4.30 மணி முதல் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், போராட்டத்தைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கூறினர். மத்தியப் பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தொடர்பு கொண்டு, போராட்ட முடிவைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கோரிக்கை வைத்தார். இன்று காலையும் உயர் அதிகாரிகள் வந்து வைகோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வைகோ திரும்பிச் செல்வதில்லை என்று தெளிவாக கூறிவிட்டார்.

அப்போது ராஜபக்சவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. அசம்பாவித சம்பாவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு குவிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பொலிஸாரும் அவர்களுக்கு எதிரிலேயே அமர்ந்துள்ளனர்.

விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராட்டம் நடைபெற்றது. வைகோ உடன் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் இரவு உணவு அங்கேயே சமைத்து பரிமாறப்பட்டது.

ராஜபக்சவின் கொடுமைகளை பற்றி ஹிந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தை அங்குள்ள கிராம மக்களுக்கு தொண்டர்கள் விநியோகம் செய்தனர்.

இதனையடுத்து நள்ளிரவில் கொட்டும் பனியில் நடுரோட்டில் தொண்டர்களுடன் வைகோ படுத்து உறங்கினார்.

காலையில் உள்ளூர் மக்கள் உணவும், நீரும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். கொளுத்தும் வெளியில் பேராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் கூட்டத்தில் பேசிய வைகோ, ராஜபக்சவுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மட்டுமல்லாது பாஜகவும் ஆதரவு தருவதாக குற்றம் சாட்டினார்.

மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று தம்மிடம் கூறிவிட்டு தற்போது எல்லையிலேயே தடுத்து நிறுத்திவிட்டதாகவும் வைகோ தெரிவித்தார்.

தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இதற்காக ஒரு உயிர்வேறு போயிருக்கிறது. தங்களை தடுத்து நிறுத்தினாலும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று கூறினார்.

இதற்காக தாம் கைதாகவும் தயார் என்றும் வைகோ கூறினார்.