சோனியா மருமகனின் நிலபேர விவகாரத்தை விசாரிக்க கோரிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்.!

Tuesday, October 16, 2012

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எப். ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும் இடையேயான நிலபேர விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த ஹரியானா மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா மற்றும் பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப்., இடையேயான நிலபேரத்தை, ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவரும், சமூக சேவகருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து, ஹரியானா மாநிலத்தில் நான்கு மாவட்டத்தில் நடந்த நிலபேர முறைகேடுகள் குறித்து மாநில அரசு விசாரிக்க வேண்டும் என அம்மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா, மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

தொடர்ந்து அதிரடியாக டி.எல்.எப். மற்றும் வதேரா இடையேயான நிலபேரத்தையும் அவர் ரத்து செய்தார்.

இந்நிலையில்,கெம்காவை இடமாற்றம் செய்து ஹரியானா மாநில தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.வழக்கமான அரசாங்க நடைமுறை தான் இது என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள கெம்கா, இந்த திடீர் இடமாற்றம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், சில அரசியல்வாதிகளை திருப்திபடுத்துவதற்காக திட்டமிடப்பட்டு தீய எண்ணத்துடன் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹரியானா அரசு மீது கெஜ்ரிவால் சாடல்

இதனிடையே இந்த இடமாற்றம் குறித்து ஹரியானா அரசை கடுமையாக சாடியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஹரியானா அரசு சோனியா காந்தி குடும்பத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியான கொம்கா, மிகவும் நேர்மையானவர் என்று கூறியுள்ள கெஜ்ரிவால்,வதேரா குறித்து விசாரிக்க கோரினால்,அந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்வது என்ற கொள்கை ஏதும் ஹரியானா அரசிடம் உள்ளதா என்று அம்மாநில முதல்வர் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.