இடிந்தகரை செல்லும் வைகோ !

Wednesday, September 12, 2012

தூத்துக்குடி : கூடங்குளத்தில் நடந்த வன்முறையை அடுத்து தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மணப்பாடை சேர்ந்த அந்தோணி ஜான் என்பவர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானார்.


பலியான அந்தோணி ஜானின் வீட்டுக்கு நேரடியாக சென்ற ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்த அவரது உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மருந்து வாங்க சென்ற அந்தோணி ஜான் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அந்த போலீஸ் அதிகாரியை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் தற்போது ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி வரும் ஒருவரைக்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார். கூடங்குளம் விஷயத்தில் போராட்டம் நடத்துபவர்களிடம் அரசு நேரடியாக சென்று பேச வேண்டும். அணுமின் நிலையம் வந்தால் எதிர்கால சந்ததியினரே பாதிக்கப்படுவர். அதற்காகத்தான் அவர்கள் போராடி வருகின்றனர் என்றார். இதனிடையே அந்தோணி ஜான் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு வைகோ இடிந்தகரை செல்கிறார்.