பாராளுமன்றத்துக்கு எந்த நேரத்திலும் திடீர் தேர்தல் வரலாம் :மம்தா பானர்ஜி !

Thursday, September 27, 2012

மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணா முல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சியினரை மதிப்பதே இல்லை. எந்த விஷயத்திலும் அவர்கள் எங்களை கலந்து ஆலோசிப்பது இல்லை. அவர்கள் தவறான கொள்கை முடிவு எடுத்திருப்பதால்தான் நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம். காங்கிரஸ் தலைவர்கள் எதை செய்வதாக இருந்தாலும்,
வெளியில் சொல்லாமல், அமைதியாக செய்கிறார்கள். தங்களது அரசு நிலையான அரசு என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு உறுதியான, நிலையான அரசு அல்ல. எந்த நேரத்திலும் கவிழலாம்.

பாராளுமன்றத்துக்கு எந்த நேரத்திலும் திடீர் தேர்தல் வரலாம். இல்லையெனில் அடுத்த ஆண்டு (2013) மார்ச் மாதம் மக்களை கவரும் வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு தேர்தலை சந்திக்க வந்து விடுவார்கள். இதுதான் நடக்கப் போகிறது. பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு கவலை தருவதாக இருக்கும்.

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு பாராளுமன்ற தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. எனவே காங்கிரஸ் கூட் டணியில் இருந்து விலகியதற்காக நான் துளி அளவு கூட கவலைப்படவில்லை. சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து யார் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை ஆதரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

காங்கிரஸ் தலைவர்கள் தொடக்கத்தில் இருந்தே தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கணக்குகளை சி.பி.ஐ.யை தூண்டி விட்டு நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி விசாரித்தார். ஆனால் எந்த முறைகேட்டையும் அவர்களால் கண்டு பிடிக்க இயலவில்லை. காங்கிரசுக்கு பாடம் புகட்ட காங்கிரஸ் அல்லாத முதல் - மந்திரிகளை கொண்ட ஒரு கூட்டமைப்பு முன்னணியை உருவாக்கினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

காங்கிரஸ் தலைவர்கள் பண பலம், அதிகார பலம் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.